Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பெற்றோர்கள் மாகாண அரசின் மற்றொரு சுற்று தொற்றுநோய் உதவி தொகையைப் பெறவுள்ளனர். இம்முறை முன்னர் வழங்கப்பட்டதை விட இரட்டிப்பாக இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு பாடசாலை செல்லும் வயதுள்ள சிறுவர்களின் குடும்பங்களுக்கு உதவு தொகையான 200 டொலர்களை மாகாணம் வழங்கியது. இந்நிலையில் இவ்வாண்டு இந்தத் தொகை 400 டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், விசேட தேவையுடைய சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இந்தத் தொகை 500 டொலர்களாக வழங்கப்படும்.

இந்தத் தொகை முழுமையாக இழப்பீடாகாது. எனினும் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவும் என ஒன்ராறியோ சட்டமன்றத்தில் இது குறித்து கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர் பீட்டர் பெத்லென்ஃபால்வி தெரிவித்தார்.

தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்து மாகாணம் 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கும் உயர் தரப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கும் இரண்டு முறை தலா 200 டொலர்கள் வீதம் உதவிக் கொடுப்பனவுகளை வழங்கியுள்ளது.

குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இந்த உதவு தொகையைப் பெறத் தகுதியுடையவர்களாவர் எனவும் மாகாண அரசு கூறியுள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இவ்வாறான உதவி தொகை வழங்குவதற்கான மொத்தம் 1.8 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் கூறுகிறது.

இதேவேளை, பெற்றோர்கள் எவ்வாறு அல்லது எப்போது இந்த உதவு தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.