Reading Time: < 1 minute

ஒன்ராறியோவில் கட்டாய கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. இந்நடைமுறையை மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் வரவேற்றுள்ளார். ஒன்ராறியோ மற்றொரு சமூக முடக்கல் நிலைக்கு நுழைவதைத் தடுக்க கட்டாய கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அவசியம் என்று அவர் கூறினார்.

கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை தற்காலிகமானதே. ஆனால் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கியமான புதிய நடவடிக்கையாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உணவகம், இரவு விடுதிகள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் பிற இடங்களுக்குள் நுழைய தடுப்பூசி சான்றிதழ்களை காண்பிக்க வேண்டியது இதன்மூலம் கட்டாயமாகிறது. தடுப்பூசி சான்றிதழ்களை காண்பிக்காதவர்களுக்கு இவ்வாறான இடங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

நாங்கள் மீண்டும் ஒரு நெருக்கடியைச் சந்திக்காமல் முன்னோக்கிச் செல்ல இவ்வாறான சில கடுமையான நடவக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என டக் ஃபோர்ட் சுட்டிக்காட்டினார்.

ஒன்ராறியோவில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட 85 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் குறைந்தது ஒரு கொவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அத்துடன், தடுப்பூசி பெறத் குதியுள்ள மக்கள் தொகையில் சுமார் 79 வீதமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றனர்.

கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறையைச் செயற்படுத்துவதில் தான் நான் ஆரம்பத்தில் தயங்கினேன். எனினும் மாகாண சுகாதார அதிகாரிகள் இது அவசியம் என்பதை வலியுறுத்தினர். எங்களது கடின உழைப்பால் தொற்று நோய் நெருக்கடியிலிருந்து ஒரளவு மீண்டுள்ளோம். மீண்டும் பின்னோக்கிச் செல்லாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது எனவும் டக் ஃபோர்ட் கூறினார்.

நாங்கள் மாகாணத்தை மீண்டும் மூட முடியாது. அல்லது நாடு முழுவதும் உள்ள மற்ற மாகாணங்களில் நாம் பார்ப்பது போன்ற தொற்று நோயின் திடீர் எழுச்சியை அனுபவிக்க முடியாது எனவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, மருத்துவ காரணங்களால் தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது. அவ்வாறானவர்கள் மருத்துவர்களின் உறுதிப்படுத்தல் சான்றுகளைக் கையளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி சான்றிதழ் திட்டத்திற்கு இணங்காத வணிக நிறுவனங்கள் மற்றும் தவறான தகவலைக் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.