ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் போக்கு தற்போதுள்ளவாறே தொடருமானால் மே மாத இறுதிக்குள் தினசரி தொற்று நோயாளர் தொகை 18 ஆயிரம் வரை அதிகரிக்கக் கூடும் என புதிய மாதிரிக் கணிப்பீட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிட்19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாண அளவிலான ஊடரங்கு உள்ளிட்ட தீவிர கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அமைச்சரவை தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்ராறியோவின் தற்போதைய போக்குகளின் அடிப்படையில் மே மாத இறுதிக்குள் 12,000 முதல் 18,000 வரை புதிய தினசரி தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கும் என சி.டி.வி. நியூஸ் ரெராண்டோ மற்றும் சி.பி.24 ஊடகங்கள் மேற்கொண்ட சமீபத்திய கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே மாகாணத்தில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஒன்ராறியோ அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
மாகாணம் தழுவிய கடுமையான ஊரடங்கை அமுல் செய்யும் யோசனை அரசாங்கத்திடம் உள்ளதா? என வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஒன்ராறியோ பொது தலைமை வழக்குரைஞர் சில்வியா ஜோன்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும் இது குறித்து உடனடியாக எதனையும் உறுதி செய்ய முடியாது என அவா் தெரிவித்தார்.
வீட்டில் தங்கும் உத்தரவுகளை மீறி, சமூக இடைவெளியைப் பின்பற்றாது பூங்காக்களில் கூடியுள்ள நபர்கள் குறித்து வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கவலையடைகிறேன் எனவும் ஜோன்ஸ் கூறினார்.
ஒன்ராறியோவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வெளியாகியுள்ள மாதிரிக் கணிப்பீடுகள் ஆபத்தை வெளிப்படுத்துபவையாக உள்ளன என ஒன்ராறியோ இணை தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா யாஃப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அடுத்துவரும் நாட்களில் தொற்று நோயாளர் தொகை அதிகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அத்துடன், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் தொகையும் அதிகரிக்கும் என அவா் அச்சம் வெளியிட்டார்.
இந்நிலையில் தொற்று நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என டாக்டர் பார்பரா யாஃப் தெரிவித்தார். எனினும் கட்டுப்பாடுகள் எவ்வாறு இருக்கும்? என அவா் கருத்து வெளியிட மறுத்துவிட்டார்.
அரசாங்கம் முடிவுகளை எடுத்து அறிவிக்கும். அதுவரை பொறுத்திருக்குமாறு அவா் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், ஒன்ராறியோ மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அரசாங்கம் அவசரமாக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒன்ராறியோ மருத்துவமனைகள் சங்கத் தலைவர் அந்தோணி டேல் நேற்று வியாழக்கிழமை ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று இதற்கு முன்னர் இல்லாதளவு மிக அதிக தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். நேற்று மாகாணத்தில் 4,736 புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர். தற்போது மாகாணத்தில் 1,932 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். 659 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.