Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து ஒன்ராறியோவில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் தற்போது புதிய கொரோனா மாறுப்பாடு தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், கனடாவின் ஒன்ராறியோவில், இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் என்ணிக்கையை வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை வெளியான அறிக்கையில், ஒன்ராறியோவில் மட்டும் இதுவரை 10,000 பேர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்த பின்னர், இந்த 20 மாதங்களில் ஒன்ராறியோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை இதுவென குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்ராறியோவின் பாரி பகுதியில், 77 வயதான ஆண் ஒருவரே மாகாணத்தில் கொரோனாவுக்கு முதன்முதலில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

2020 மார்ச் 17ம் திகதி முதல் இறப்பு பதிவான நிலையில், அடுத்த 6 வாரங்களில் இறப்பு எண்ணிக்கை 1,000 தொட்டுள்ளது. இரண்டாவது அலை ஏற்பட்ட பின்னர் ஜனவரி 11ம் திகதி, கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,000 தொட்டுள்ளது.

இதற்கும் இரண்டரை வாரங்களுக்கு பின்னர் மேலும் 1,000 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். கனடாவில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்ட நிலையில் ஒன்ராறியோவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 9,000 என பதிவானது.

இந்த காலகட்டத்தில் தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்பட்டதுடன், மக்கள் தன்னிச்சையாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளில் நாட்டம் கொண்டனர். இதனால் அடுத்த 5 மாதங்களில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1000 தொட்டதையடுத்து, ஒன்ராறியோவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 10,000 இறப்பு எண்ணிக்கையில் 3,824 பேர்கள் முதியோர் காப்பகங்களில் வசிப்போர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 618,490 எனவும்,

செவ்வாய்க்கிழமை மட்டும் 687 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் மொத்தம் 11.2 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.