கனடா தலைநகர் ஒட்டாவாவில் போலியான தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்ததாக கூறி மருத்துவ உதவியாளர் ஒருவர் சிக்கியுள்ளார்.
ஒன்ராறியோவில் சுகாதார ஊழியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறுபவர்கள் நவம்பர் மாதத்தில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பிராந்திய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது. ஆனால், பொதுநலன் கருதி மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றே மாகாண நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒட்டாவா நகரில் தமது வேலையை தக்கவைத்துக் கொள்ள மருத்துவ ஊழியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல், சான்றிதழ் சமர்ப்பித்த சம்பவம் சட்ட சிக்கலை எதிர்கொள்ள வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தங்களுக்கு அக்டோபர் 21ம் திகதி தகவல் கிடைத்துள்ளதாக கூறும் பொலிசார், குறித்த ஊழியரின் நிர்வாகமே முன்னெடுத்த ஆய்வில் அது போலி என கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புதன்கிழமை 30 வயது Ali Abdelgani என்ற அந்த மருத்துவ ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவரை விடுவித்துள்ளனர். மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் மிக விரைவில் அவர் முன்னிறுத்தப்படுவார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.