ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் கோவிட்19 தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ள நிலையில் கனடாவில் ஏற்கனவே சிக்கலில் உள்ள தடுப்பூசித் திட்டங்கள் மேலும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
கனடாவுக்கு தற்போது தடுப்பூசிகளை வழங்கிவரும் பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னாவின் தயாரிப்புக்கள் பெரும்பாலும் ஐரோப்பாவில் இடம்பெறுவதால் கனடாவுக்கான தடுப்பூசி விநியோகங்கள் மேலும் தாமதமடையக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், தடுப்பூசி ஏற்றுமதி தொடர்பில் ஐரோப்பா வெளிப்படைத்தன்மையான பொறிமுறையை உருவாக்கும் எனத் தெரிவித்தார்.
இந்தப் பொறிமுறை மூலம் ஐரோப்பாவில் எவ்வளவு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன? எவ்வளவு தொகை எந்தெந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன? என்பதைக் கண்டறிய முடியும் என அவர் கூறினார்.
சர்வதேச ரீதியில் தொற்று நோயை ஒழிக்கும் முயற்சியாக தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு ஐரோப்பா பல பில்லியன்களை முதலீடு செய்தது. எனவே, ஐரோப்பாவுக்கு போதிய தடுப்பூசிகளை உற்பத்தி நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.
பைசர் நிறுவனம் தனது விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ள நிலையில் இந்த வாரம் கனடாவுக்கு எந்தவிதமான தடுப்பூசிகளும் விநியோகிக்கப்படவில்லை. அடுத்த வாரம் முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்ட தடுப்பூசி அளவுகளில் கால் பகுதியே கிடைக்கவுள்ளது.
இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ள அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகளும் ஆரம்பத்தில் குறைந்தளவு அளவே கனடாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
தடுப்பூசி போடும் பணிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவை விட ஐரோப்பிய நாடுகள் பின்தங்கியுள்ளதால் ஐரோப்பிய தலைவர்கள் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிகளை மட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவால் கனடாவுக்கான விநியோகங்கள் குறைந்துள்ளன. இதனால் பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் தடுப்பூசி திட்டங்களை மெதுவாக்கும் நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டுள்ளன. அத்துடன், இரண்டாவது தடுப்பூசிகளை போடும் பணிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எனினும் பெப்ரவரி 15 -ஆம் திகதிக்குப் பின்னர் கனடாவுக்கான தடுப்பூசிகளை ஒப்பந்தத்தில் உறுதியளித்தவாறு வழங்குவதாக பைசர் உறுதியளித்துள்ளது.
இதேவேளை, கனடாவுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உதவியை நாடுமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.
எனினும் பதவிக்கு வந்து முதல் 100 நாட்களில் 100 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என பைடன் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் கனடாவுக்கு அவர் உடனடியாக உதவும் சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.
எவ்வாறாயினும் செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து கனேடியர்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உறுதியாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.