ஆல்பர்ட்டா மாகாணம், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பணியாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், உள்ளூர் தொழிலாளர் யூனியன் தலைவர்களை கவலைக்குள்ளாக்கியது.
கனடாவின் CBC News ஊடகத்திற்குக் கிடைத்த மின்னஞ்சல் ஒன்றில், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச பணியாளர் தேர்வுத் திட்டத்துக்காக, ஆல்பர்ட்டா மாகாணம், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பணியாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
நவம்பர் 5 திகதியிடப்பட்ட அந்த மின்னஞ்சலிலிருந்து, ஆல்பர்ட்டா மாகாண புலம்பெயர்தல் மற்றும் பன்முகக் கலாச்சாரத்துறையின் ஆலோசகர் ஒருவர், இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைய விரும்புவோர் பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளது தெரியவந்தது.
அத்துடன், ஆல்பர்ட்டா எலக்ட்ரீசியன்கள் யூனியன் ஒன்று CBC News ஊடகத்திற்கு அனுப்பியுள்ள ஆவணம் ஒன்றிலும் 2025 பிப்ரவரி மாத இறுதியிலிருந்து மார்ச் மாதத்தின் துவக்கம் வரை இந்த திட்டம் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூரிலேயே பல எலக்ட்ரீசியன்கள் இருக்கும்போது இப்படி ஆல்பர்ட்டா மாகாணம் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களைக் கவர திட்டமிட்டுள்ள விடயம் தங்களைக் குழப்பமடையச் செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பணியாளர்களைக் கொண்டுவரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பணியாளர்களைக் கொண்டுவரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆல்பர்ட்டா மாகாண புலம்பெயர்தல் மற்றும் பன்முகக் கலாச்சாரத்துறை அமைச்சரான Muhammad Yaseen தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாங்கள் கவலை தெரிவித்தது அரசாங்கத்தின் கவனத்தைச் சென்றடைந்ததற்காக ஆல்பர்ட்டா எலக்ட்ரீசியன்கள் யூனியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.