ஏர் கனடா விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தை எட்ட வேண்டிய பொறுப்பு ஏர் கனடா மற்றும் விமானிகள் சங்கத்தின் மீது உள்ளதாக மத்திய அரசாங்கத்தின் மீது அல்ல அல்ல என்றும் அவர் கூறினார்.
வேலை நிறுத்த எச்சரிக்கை
ஏர் கனடா விமானிகள் சங்கத்தின் வேலை நிறுத்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (13) மாண்ட்ரீலில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது ட்ரூடோ இதனைக் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வேலை நிறுத்தத்தால், விமானப் பயணத்தை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான கனேடியர்கள், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை எப்படிக் கண்டறிவது என்பதை ஏர் கனடா மற்றும் விமானிகள் சங்கம்தான் செய்ய வேண்டும்.
ஏர் கனடா மற்றும் அவர்களின் விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கூட்டாட்சி அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ட்ரூடோ கூறினார்.
இந்நிலையில் ஏர் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA), தொழிலாளர் பிரச்சினையில் உள்ள ஏர் கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், வெள்ளிக்கிழமை ஏர் கனடாவுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறுகிறது.
அதேவேளை ஞாயிற்றுக்கிழமைக்குள் (15) தீர்வு எட்டப்படாவிட்டால், 5,200 ஏர் கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏர் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA), 72 மணிநேர கதவடைப்பு அல்லது வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.