329 பேர் பலியான 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்ட கனேடிய சீக்கிய தொழிலதிபர் ரிபுதாமன் சிங் மாலிக் கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு (16:30 GMT) பிரிட்டிஷ் கொலம்பியா – சர்ரே பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பொலிஸார் அங்கு விரைந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் அங்கு இறந்து கிடந்தத்தைக் கண்டறிந்தனர் என கனடா ஆர்.சி.எம்.பி. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்டவரின் பெயரைக் கூற முடியாது என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் கூறினார்.
ஆனால் அந்த நபர் 329 பேர் பலியான 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்ட கனேடிய சீக்கிய தொழிலதிபர் ரிபுதாமன் சிங் மாலிக் என உள்ளூர் ஊடகங்கள், ஆதாரங்கள் மற்றும் ஒரு சாட்சியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
1985 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் ஏர் இந்தியா விமானம் 182 (Air India Flight 182 ) வெடித்துச் சிதறியது. உலக வணிக விமான வரலாற்றின் மிக மோசமான குண்டுவெடிப்புகளில் ஒன்றாக இது பதிவானது.
1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில் தாக்கப்பட்டமைக்கு பழிவாங்கும் வகையில் கனடாவில் வசிக்கும் சீக்கிய தீவிரவாதிகளால் விமானம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதாக இந்திய பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற படுகொலை திட்டமிட்டே செய்யப்பட்டதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இன்னும் சந்தேக நபர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஏர் இந்தியா படுகொலை வழக்கில் கனேடிய சீக்கிய தொழிலதிபர் ரிபுதாமன் சிங் மாலிக்குக்கு தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாததால் 2005 ஆம் ஆண்டு அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் ஒரு காலத்தில் சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் நரிடா விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதேவேளை, ஏர் இந்தியா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் கனேடிய அரசாங்கம் 2010 ஆம் ஆண்டில் முறையாக மன்னிப்புக் கோரியமை குறிப்பிடத்தக்கது.