கனடாவின் சாஸ்கடூன் நகரில் எரிவாயு நிரப்பு நிலையத்தின் புதிய ஊழியர் மீது இனவெறித் தாக்குதல் மேற்கொண்டதாக 45 வயது மதிக்கத்தக்க வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருந்ததாக அதனை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
ஹிதாயத் உல்லா என்பவர் வாமன் வீதியில் உள்ள எரிவாயு நிரம்பு நிலையத்தில் வழமையான காலை பணிகளை மேற்கொண்டிருந்த போது, அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ‘சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும் படியும், இங்கு இருப்பதற்கு தகுதியற்றவன்’ என்று வன்முறையான வகையில் நடந்து கொண்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த வாடிக்கையாளர் ஹிதாயத்துல்லாவின் நெஞ்சில் கைவைத்து தள்ள முற்பட்டுள்ளார்.
வாகனத்திற்கான எரிவாயு நிரப்பப்பட்ட பின்னரே இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வியாபார நிலையத்திற்குள் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததாகவும். அங்கு ஒரு சொக்லேட் பார் தாங்கியை உதைத்தும், இரண்டு காட்சி அலுமாரிகளை தள்ளியும், கடையில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியதாக எரிவாயு நிலைய ஊழியரான ஹிதாயத் உல்லா குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் தனது சொந்த நாடான பங்களாதேஷூக்கு மீண்டும் திரும்பிச் செல்லும்படி வன்முறையான வகையில் கூச்சலிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த வாடிக்கையாளர் நேற்று காலை கைது செய்யப்பட்டு மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.