கனேடிய பிரதான எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் எரின் ஓ’டூலை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சந்தித்துப் பேசினார்.
அடுத்த வாரம் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது கனடாவில் தற்போதுள்ள கோவிட்19 தொற்று நோய் நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரதமர் விளக்கினார். அத்துடன், கூட்டாட்சி அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ள விடயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்றம் தடையின்றி செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் இச்சந்திப்பில் பிரதமர் வலியுறுத்தினார்.
அத்துடன், கால நிலை மாற்றம், தொற்று நோய்க்கு மத்தியில் கனேடியர்களுக்கான ஆதரவு வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பில் பிரதமர் விவாதித்தார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.