Reading Time: < 1 minute

முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக அமெரிக்கா – கனடா எல்லையை உடனடியாகத் திறக்க வேண்டும் என அமெரிக்க சட்டவாக்க சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் எச்சரிக்கையுடனேயே எல்லையைத் திறக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கியூபெக்கிலுள்ள காஸ்பேவில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, கனேடியர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே எல்லைகளைத் திறப்பது பாதுகாப்பானது எனத் தெரிவித்தார்.

கவலைக்குரிய டெல்டா திரிபு வைரஸ் பரவல் குறித்த அச்சங்கள் இன்னமும் உள்ளன. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எச்சரிக்கையுடனேயே எடுக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினார்.

முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக எல்லையை உடனடியாகத் திறக்க வேண்டும் என அமெரிக்கா – கனடா அரசுகளை வலியுறுத்தி மிட்வெஸ்ட் பகுதி அமெரிக்க சட்டவாக்க சபை உறுப்பினர்கள் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் ட்ரூடோ இவ்வாறான கருத்துக்களை தெரிவித்தார்.

கனடா தொற்று நோயில் நான்காவது அலையில் சிக்குவது என்பதை ஜீரணிக்க முடியாது. இது மற்றொரு அழிவுக்கு வித்திடும் என்பதை நாங்கள் அறிவோம் எனவும் பிரதமர் ட்ரூடோ கூறினார்.

தொற்று நோய் நெருக்கடியை அடுத்து கனடா- அமெரிக்கா இடையிலான எல்லை 2020 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. அன்று முதல் மாதாமாதம் எல்லை மூடல் உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய எல்லை மூடல் உத்தரவு ஜூலை 21 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.

இவ்வாறான நிலையிலேயே எல்லைகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்காவின் மிட்வெஸ்ட் பகுதி சட்டவாக்க சபை உறுப்பினர்கள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கனடாவில் தற்போது தடுப்பூசி பெறத் தகுதியுள்ளவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எனினும் குறைந்தது 75 வீதமான கனேடியர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் போடும் வரை எல்லைகளைத் திறப்பதில்லை என்ற முடிவில் கனடா மத்திய அரசு உள்ளதாகத் தெரியவருகிறது.