கனடா அரசு, ஐ எஸ் அமைப்பில் இணைந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் கனேடிய பெண்கள் மற்றும் சிறுவர்களையும், சில ஆண்களையும் சிரியாவிலிருந்து கனடாவுக்கு அழைத்துவர திட்டமிட்டுவருகிறது.
ஆனால், ஐ எஸ் அமைப்பால் பயங்கரமாக பாதிக்கப்பட்ட யாஸிடி இனத்தவர்கள், அந்த கனேடியர்களை கனடாவுக்கு அழைத்துவரவேண்டாம் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதாவது, ஐ எஸ் அமைப்பினர் இந்த யாஸிடி இனத்து ஆண்களைக் கொலை செய்து, பெண்களையும் பிள்ளைகளையும் பிடித்து அடிமையாக்கியுள்ளார்கள்.
பெண்கள், வயது வாரியாக வகைப்படுத்தப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டுள்ளார்கள். அவர்களை வாங்கிய ஐ எஸ் அமைப்பினர், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளார்கள்.
பெண்களிடமிருந்து 10 வயதேயான சிறுமிகளைக் கூட பறித்துச் செல்லும் ஆண்கள், அவர்களை வன்புனர்வு செய்வதை, பக்கத்து அறையிலிருந்து கேட்டு துடிதுடித்துப்போயிருக்கிறார்கள் தாய்மார்கள்.
இப்படி பெண்களை வாங்கி கொஞ்சம் நாள் வன்புணர்ந்துவிட்டு, வேறொருவரிடம் விற்று விடுவார்களாம். அந்த ஆள் அந்தப் பிள்ளைகளை சீரழித்துவிட்டு வேறொருவரிடம் விற்பார்.
இப்படியே சிறுபிள்ளைகள் முதல் பெண்கள் வரை ஐ எஸ் அமைப்பிலுள்ள ஆண்களால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பெற்றோருக்கு என்ன ஆனது, அவர்களுடைய குடும்பத்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதுகூட பலருக்குத் தெரியாது.
இப்படி பாதிக்கப்பட்ட பலருக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது.
தற்போது, ஐ எஸ் அமைப்பில் இணைந்திருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் கனேடியர்களான பெண்களையும் சில ஆண்களையும், பிள்ளைகளையும் கனடாவுக்கு அழைத்துவர கனடா முடிவு செய்துள்ளது.
ஆனால், தங்களை சிரியாவில் கொடுமைப்படுத்தியது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான் என்கிறார்கள், கனடாவில் வாழும் யாஸிடி இனத்தவர்கள்.
ஆண்கள் வன்புணர்ந்தார்கள், பெண்கள் எங்களை கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார்கள் என்கிறார்கள் அவர்கள்.
ஆகவே, அந்தக் கனேடிய பெண்களை கனடாவுக்கு அழைத்துவரக்கூடாது என யாஸிடி இனத்துப் பெண்கள் கனடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.