உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் உலக அளவில் உணவு மற்றும் எரிசக்தி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கனடா உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 70 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஜி7 நாடுகளின் சிறந்த இராஜதந்திரிகளுக்கான கூட்டம் ஒன்றை ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர் முன்னெடுத்துள்ளார்.
அதில், உக்ரைன் உடனான போர் ஒரு உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், வரும் மாதங்களில் 50 மில்லியன் மக்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவிக்கையில், ஐரோப்பிய துறைமுகங்களுக்கு கப்பல்களை அனுப்ப கனடா தயாராக உள்ளதாகவும், எனவே உக்ரேனிய தானியங்களை தேவைப்படுபவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்றார்.
தானியங்களை தாமதப்படுத்தாமல் தேவையானோருக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ள தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உலகளாவிய பஞ்சத்தை ஏற்படுத்துவதற்கும் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கும் தாங்கள் காரணம் என்ற கூற்றை ரஷ்யா நிராகரித்துள்ளது.