பணி-வாழ்க்கைச் சமனிலையான உலகின் மிகச் சிறந்த நகரங்களின் வரிகையில் மூன்று கனேடிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
ஒட்டாவா, வான்கூவார் மற்றும் றொரன்டோ ஆகிய நகரங்கள் இவ்வாறு குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
2022ம் ஆண்டுக்கான பணி – வாழ்க்கைச் சமனிலை சுட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பணி மற்றும் வாழ்க்கைக்கு இடையில் மிகச் சிறந்த சமனிலையை தங்களது பிரஜைகளுக்கு வழங்கும் நகரங்கள் எவை என்பது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.
அமெரிக்காவின் 51 நகரங்களும் உலகின் ஏனைய நாடுகளிலிருந்து 49 நகரங்களும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பணிச்சுமை, நகர வாழ்க்கை, உலக் சுகாதாரம், விடுமுறை நாட்கள், கலாச்சார மற்றும் பொழுது போக்கு அம்சங்கள், வீட்டு வசதி போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் நோர்வேயின் ஒஸ்லோ முதல் இடத்தையும், சுவிட்சர்லாந்தின் பேர்ன் இரண்டாம் இடத்தையும், பின்லாந்தின் ஹெல்சின்கீ மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.
கனடாவின் ஒட்டாவா 7ம் இடத்தையும், வான்கூவார் 16ம் இடத்தையும், றொரன்டோ 19ம் இடத்தையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.