கனடா எல்லையில் உறைபனியில் சிக்கி உயிரிழந்த 4 குஜராத்திகள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் ஊடுருவ முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
பல ஏஜண்டுகள் கனடாவில் இருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க வைத்து, அவர்களை அமெரிக்காவில் கொண்டுவிடும் வேலையைச் செய்கின்றனர். இவ்வாறு கனடா – அமெரிக்கா எல்லை கடக்கும் பயணம் மிகவும் ஆபத்தானது, இந்த பயணத்தில் பலர் உயிரிழப்பது உண்டு.
அமெரிக்கச் சட்ட அமலாக்கப்பிரிவினர் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான ஸ்டீவ் ஷாண்ட் என்பவரைக் கனடா எல்லைக்கு அருகே கைது செய்தனர். கனடாவில் இருந்து சட்ட விரோதமாக மனிதர்களைக் கடத்தி அமெரிக்காவில் கொண்டு சென்று விடும் வேலையை இவர் செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வடக்கு டகோட்டாவில் உள்ள அமெரிக்க எல்லைக் காவல்படை புதன்கிழமையன்று கனடா எல்லைக்கு தெற்கே ஸ்டீவ் ஷாண்ட் என்பவர் இயக்கிய ஒரு பயணிகள் வேனை நிறுத்தியது, அதில் ஆவணமற்ற இரண்டு இந்தியப் பிரஜைகளுடன் இருந்தார். , அந்த வாகனத்தின் உள்ளே பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் மற்றும் சிற்றுண்டிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வேனை பிடித்த இடத்திற்கு அருகிலேயே ஐந்து இந்தியப் பிரஜைகள் நடந்து செல்வதை அதிகாரிகள் கண்டனர்.
இதையொட்டி கனடாவின் வின்னிபெக்கில் உள்ள மனிடோபா ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக அந்தப் பகுதியைத் தேடத் தொடங்கினர். மிகவுக் கடினமான தேடுதலுக்குப் பிறகு, எல்லையில் இருந்து 10 மீட்டர் தொலைவில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூன்று உடல்களை அதிகாரிகள் ஒன்றாகக் கண்டுபிடித்தனர்.
அதற்குச் சிறிது தூரத்தில் ஒரு இளம் சிறுவனின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது . அனைவரும் குளிர்கால ஆடைகளை அணிந்திருந்தும் உறைபனி தாங்காமல் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது, அப்பகுதியில் குளிர் வெப்பநிலை மைனஸ் 35 C ஆக உள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், “கனடா-அமெரிக்க எல்லையில் ஒரு கைக்குழந்தை உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள எங்கள் தூதர்களை இந்த நிலைமை குறித்து அவசரமாக விசாரித்துப் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெட்டிசன்கள் குஜராத் மாநிலம் செல்வச் செழிப்புடன் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கும் போது இவர்கள் ஏன் எல்லை தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டும் எனக் கேள்விகள் எழுப்பி உள்ளனர். மேலும் அவர்கள் குஜராத் காவல்துறையினர் வெளிநாட்டைக் காணும் ஆவலுடன் உள்ளதால் இது குறித்து கனடா வந்து ஆய்வு நடத்த ஆர்வம் காட்டுவதாகக் கூறி உள்ளனர்.