Reading Time: < 1 minute

தமிழ்ச் சமூக மையம், உயிர்த்துடிப்புள்ள தமிழ்க் கனேடிய சமூகத்தை ஒன்றுபடுத்தும் ஒரு இடமாகவும், அனைத்துப் பின்னணிகளையும் கொண்ட கனேடியர்கள் பல தலைமுறைகளாகப் பயன்பெறவுள்ள இடமாகவும் இருக்கும் என கனடா – ஒன்ராறியோ மாகாணம் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கனடாவில் உட்கட்டுமான முதலிடல் திட்டத்தினூடாக நிதி பெறுவதற்கென மத்திய மாகாண அரசுகளால் தமிழ் சமூக மைய செயற்றிட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறித்துக் கருத்து வெளியிடும்போதே அவா் இவ்வாறு கூறினார்.

தமிழ்ச் சமூக மையத்திற்கு 26.3 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கிறது. இதில் கனேடிய மத்திய அரசு 14.3 மில்லியன் டொலர் நிதியுதவி அளிக்கிறது.

கனடா துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான கிறிஸ்ரியா ஃபிறீலாண்ட், தமிழ்ச் சமூக மையத்தைக் கட்டுவதற்குக் கனேடிய அரசு 14.3 மில்லியன் டொலரை வழங்குமென நேற்று இடம்பெற்ற நிகழ்வில பங்கேற்று உத்தியோகபூா்வமாக அறிவித்தார்.

கனடாவில் முதலிடுதல் திட்டத்தின் சமூக, கலாச்சார பொழுதுபோக்கு உட்கட்டுமானப் பிரிவின் கீழ் இந்தத் திட்டத்திற்குப் பணம் வழங்கப்பகிறது.

இதேவேளை,ஒன்றாரியோ மாகாண அரசு 11.9 மில்லியன் டொலரை வழங்குவதாக அறித்துள்ளது. அத்துடன், ரொரண்டோ மாநகரம் கட்டடத்துக்கான காணியை வழங்குகிறது.

இந்நிலையில் சமூகத்தை ஒன்றிணைக்கும் இடம் ஒன்றைப் பெறுவதற்குத் தமிழ்க் கனேடியர்கள் பல தலைமுறைகளாக மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேற இந்த நிதியுதவி வழிவகுக்கும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் அமைப்பதற்கான சிறப்பு அறிவித்தல் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. கனடிய தமிழர்களின் வரலாற்றில் முக்கிய அறிவித்தலாக இது அமைந்தது.

கனேடிய துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் (Chrystia Freeland), ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) , ரொரண்டோ நகர முதல்வர் ஜோன் டோரி (John Tory) உள்ளிட்ட கனேடிய அரசியல் அரசியல் தலைவர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

அத்துடன், கனேடிய தமிழ் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ்ச் சமூக மையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ரொரண்டோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் ரொரண்டோ நகரவாக்கச் சபை (Create TO), 311 ஸ்ரெயின்ஸ் பகுதியில் தமிழ்ச் சமூக மையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமையவுள்ள தமிழ் சமூக மையத்தில் கலையரங்கம், நூலகம், உடற்பயிற்சிக்கூடம், வெளியரங்க விளையாட்டு மைதானம், பல்தேவைகளுக்கான இடங்கள், மனநல சேவைகள், முதியோருக்கான நிகழ்சி வசதிகள் என்பன உள்ளடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.