உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யாவை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அவரை பாராட்டியதுடன், உக்ரேனியர்களுடன் கனடாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சிறந்த துணிச்சலையும், முன்னணித் தலைமையையும் பிரதம மந்திரி ட்ரூடோ பாராட்டினார். இது கனேடியர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் உத்வேகம் அளிப்பதாகக் அவா் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் வலிந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் கனடா ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமைக்காக இதன்போது பிரதமர் ட்ரூடோவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
உக்ரேனிய மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதுடன், உக்ரைனின் இறையாண்மை பிரதேசத்தின் மீதான நியாயமற்ற மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க செய்யும் வகையிலும் நேச நாடுகள் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் தனது உறுதிப்பாட்டை பிரதமர் ட்ரூடோ இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.
உடனடியாகவும் எதிர்காலத்திலும் உக்ரைனுக்கான கனடாவின் உதவிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அத்துடன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இதன்போது ட்ரூடோ கேட்டுக்கொண்டார் எனவும் கனடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.