உக்ரைனிலிருந்து போருக்குத் தப்பியோடி வரும் உக்ரைன் அகதிகள், கனடாவில் மூன்று ஆண்டுகள் வாழ்வதற்கும், பணி செய்வதற்கும் வசதியாக, புதிய சிறப்பு புலம்பெயர்தல் திட்டம் ஒன்றை பெடரல் அரசு இன்று அறிவித்துள்ளது.
Canada-Ukraine authorization for emergency travel என்று அழைக்கப்படும் அந்த திட்டத்தின் கீழ் விசா பெறுவதற்கு, பொதுவாக கனேடிய விசா பெறும்போது என்னென்ன முக்கிய விடயங்கள் தேவையோ, அவற்றிலிருந்தெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும் உக்ரைனியர்களுக்கு பாஸ்போர்ட் இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அத்துடன், உக்ரைனிலிருந்து வரும் உக்ரைனியர்களின் குடும்பத்தினர் எந்த நாட்டவர்களாக இருந்தாலும், அவர்களும் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் கனேடிய தற்காலிக வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே கனடாவுக்கு வந்துவிட்ட உக்ரைனியர்களும் இந்த திட்டம் வாயிலாக, தங்கள் தங்குதலை நீட்டித்துக்கொள்ளலாம்.
மேலும், உக்ரைனியர்களின் புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் தொடர்பிலான கட்டணங்கள் அனைத்தையும் நீக்க இருப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.
இதுபோக, உக்ரைனியர்களுக்கான வேலைவாய்ப்புகள் என்னும் இணையதளத்தையும் கனடா அரசு துவங்கியுள்ளது. அதன் வாயிலாக, உக்ரைனிய அகதிகளுக்கு உதவ விரும்பும் பணி வழங்குவோர், வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை வெளியிடலாம்.
உக்ரைனிலிருந்து போருக்குத் தப்பியோடி வரும் எண்ணிக்கையிலடங்கா உக்ரைனியர்களை ஏற்றுக்கொள்ள இருப்பதாக கனடா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.