கனடா வான் பாதுகாப்பு எல்லையில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உக்ரைனுக்கான கூடுதல் உதவிகளை வழங்க கனடா மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
ரஷ்ய அனைத்து விமானங்களுக்கும் கனடாவின் வான்வெளி மூடப்படும் என கனடா போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல் காப்ரா நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ரஷ்யாவை நாங்கள் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, செக் குடியரசு, போலந்து, பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா மற்றும் லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய விமானங்கள் நுழைவதற்கு தங்கள் வான்வெளி எல்லைகளை மூடியுள்ள நிலையில் கனடாவும் இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரஷ்யாவின் முதன்மை விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் (Aeroflot) கனடா வான்வெளி ஊடாக அமெரிக்கா பிற நாடுகளுக்கான பல விமான சேவைகளை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உக்ரைன் துணைப் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் 25 மில்லியன் டொலர் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனுக்கு கனடா அனுப்பவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். பாதுகாப்பு தலைக்கவசங்கள், உடல் பாதுபாப்பு கவசம், எரிவாயு தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் கவசங்கள் மற்றும் இரவு பார்வை கருவிகள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
இந்த உபகரணங்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய கனடா போலந்துடன் இணைந்து செயல்படுகிறது என ஜோலி கூறினார். மேலும் பல உதவிகளை நாங்கள் மேலும் அனுப்புவோம் எனவும் அவா் குறிப்பிட்டார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை இலக்குவைத்து தனது நட்பு நாடுகளுடன் இணைந்து கனடாவும் தடை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத் தடைகளின் மற்றொரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய வங்கிகளை நிதி தகவல் சேவையான ஸ்விஃப்டில் (SWIFT) இருந்து அகற்றும் தீா்மானத்துக்கும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுடன் இணைந்து கனடாவும் ஆதரவளிக்கும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.
ஏற்கனவே கனடா சுமார் 33,000 உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.