Reading Time: < 1 minute

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் “இனப்படுகொலை” என ஏகமனதாக ஏற்று அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ரஷ்யாவால் மனித குலத்திற்கு எதிரான கட்டமைக்கப்பட்ட கொடூரங்கள் மற்றும் பாரிய போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஏராளமான சான்றுகள் இருப்பதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

ரஷ்யாவின் போர்க்குற்றங்களில் பாரிய அட்டூழியங்கள், உக்ரேனிய குடிமக்களை திட்டமிட்டு படுகொலை செய்தல், கொல்லப்பட்ட உக்ரேனியர்களின் சடலங்களை இழிவுபடுத்துதல், உக்ரேனிய குழந்தைகளை வலுக்கட்டாயமாக நகர்த்துதல், சித்திரவதை, உடல் ரீதியான தீங்கு விளைவித்தல், உள ரீதியான தீங்கை ஏற்படுத்தல், பாலியல் பலாத்காரம் ஆகியவை அடங்கும் என கனேடிய பொதுமன்றத்தில் (The Canadian House of Commons) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று வர்ணிப்பது முற்றிலும் சரியானது என இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

உக்ரைனில் இடம்பெறுவது ரஷ்யாவின் இனப்படுகொலை என்றே எனக்குத் தோன்றுகிறது. எனினும் இது இனப்படுகொலையா? இல்லையா ? என்பதை சர்வதேச சட்ட வல்லுநர்கள் தீர்மானிக்க அனுமதிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அண்மையில் குறிப்பிட்டார்.

இதேநேரம் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷ்யா, உக்ரைனில் தனது நடவடிக்கையை “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று கூறுகிறது. ரஷ்யாவை அச்சுறுத்துவதற்கு அமெரிக்கா உக்ரைனைப் பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை அவசியம் எனவும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீதான போரை ரஷ்யா ஆரம்பித்த பின்னர் அந்நாடு மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள பல நாடுகளில் கனடாவும் ஒன்று.

உக்ரைன் கிழக்கில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தின் சில பகுதிகளை ரஷ்யா இணைக்க முயற்சித்ததற்கு உடந்தையாக இருந்த 203 நபர்கள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை நேற்று புதன்கிழமை கனடா விதித்ததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.