ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, போருக்குத் தப்பியோடி வரும் உக்ரைனியர்களை விரைவாக வரவேற்பதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரைனிலிருந்து வெளியேறி அக்கப்பக்கத்து நாடுகளில் தஞ்சம் புக முயன்று வருகிறார்கள்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து, கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சகத்துக்கு கடந்த சில வாரங்களாக உக்ரைனிலிருந்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே கனடாவுக்கு வந்தவர்கள் மற்றும் உக்ரைனிலிருந்து தப்பி வருபவர்கள் விரைவாக கனடா வந்தடையவும், இந்த அநியாயமான போர் முடிவுக்கு வந்த பிறகும்கூட, அவர்கள் கனடாவில் தங்கும் வகையிலும், அவர்களது விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக ட்ரூடோ தெரிவித்தார்.
அத்துடன், உக்ரைன் நாட்டவர்கள் பணி அனுமதி மூலம் கனடா வரவும், ஏற்கனவே கனடா வந்துள்ளவர்களின் பணி அனுமதிகளை நீட்டிக்கவும் கூடுதல் வழிவாய்ப்புகளை உருவாக்குவதை உறுதி செய்வதற்காக, ஆவன செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனவரி 19ஆம் திகதியிலிருந்து சுமார் 4,000 உக்ரைனியர்களின் புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, ரஷ்யா உக்ரைனை ஊடுருவலாம் என்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றதுமே, வந்து குவிய இருக்கும் விண்ணப்பங்களை வரவேற்பதற்காக, ஒரு மாதத்திற்கு முன்பே கனடா தயாராகத் துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.