உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என கனடா தெரிவித்துள்ளது.
பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற தன்மை மற்றும் திறமையின்மையே மிகப் பெரிய பேரழிவுக்குக் காரணமாக அமைந்ததாக நேற்று வியாழக்கிழமை இது குறித்து கனேடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
2020 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு விழுத்தியது. இதில் விமானத்தில் இருந்த 176 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 55 கனேடிய பிரஜைகள் மற்றும் 30 நிரந்தர குடியிருப்பாளர்கள் அடங்குவர்.
அமெரிக்காவுடனான மோதல் போக்கின் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் இருந்த நிலையில் தவறுதலாக இந்த பேரழிவு தரும் சம்பவம் இடம்பெற்றுவிட்டதாக இது குறித்து ஈரான் தெரிவித்தது.
இந்த விமானம் சுட்டு விழுத்தப்பட்ட சம்பவம் குறித்து கனேடிய விசேட தடயவியல் குழு விசாரணைகளை நடத்தியது. இரகசிய புலனாய்வுக் குழுக்களும் தகவல்களைத் திரட்டின. இவற்றின் மூலம் வெளியான தகவல்களின் அடிப்படையில் விமானத்தை சுட்டு விழுத்த முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்பதும் இது குறித்து முன்னரே ஈரானிய அதிகாரிகள் உத்தரவிட்டதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனவும் கனேடிய அரசு கூறியுள்ளது.
எனினும் விசாரணைகளில் வெளியான முடிவு 176 அப்பாவி மக்களைக் கொன்றமைக்கான ஈரானின் பொறுப்புக் கூறல் கடப்பாட்டை நீக்காது என இது குறித்து கனேடிய அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.