ஈரான் மீது கனடா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் பிரயோகித்துள்ளன.
பயணிகள் விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் தொடர்பிலான சர்ச்சை இன்னமும் தொடர்கின்றது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் ஈரான் நடுவர் தீர்ப்பாயம் ஒன்றின் விசாரணைகளுக்கு இணங்க வேண்டுமென கனடா, பிரிட்டன், சுவீடன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் கோரியுள்ளன.
வர்த்தக விமானங்கள் தாக்குதலுக்கு இலக்காவதனை தடுக்கும் நோக்கிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் பிரகாரம் ஈரானின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 55 கனேடிய பிரஜைகளும், 30 நிரந்தர வதிவாளர்களும் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈரானிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
எனவே பொதுவான ஓர் நாட்டின் நடுவர் தீர்ப்பாயத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முனைப்பு காட்டுவதாகவும், இதற்கு ஈரான் இணங்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
ஈரான் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளத் தவறினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.