கனேடியர் ஒருவர், ஒரு இஸ்லாமியக் குடும்பத்தையே வேன் மோதிக் கொன்றுவிட்டு, இப்போது மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), தம்பதியரின் 9 வயது மகன் மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74) ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, நத்தானியேல் (Nathaniel Veltman, 20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.
வேன் மோதியதில், சல்மான், அவரது மனைவி மதீஹா, தம்பதியரின் மகள் யும்னா மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
தம்பதியரின் மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், பின் உயிர் பிழைத்துக்கொண்டான். இந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஆகும்.
விடயம் என்னவென்றால், சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக நத்தானியேல் வேனை வேண்டுமென்றே அவர்கள் மீது மோதி, இந்த கொடூர செயலைச் செய்திருந்தார்.
ஒன்ராறியோவில் இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், தான் செய்த தவறுக்கு நத்தானியேல் மன்னிப்புக் கோரியுள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களிலிருந்து, தன்னால் அஃப்சால் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட வேதனையையும் இழப்பையும் தான் புரிந்துகொண்டதாக தெரிவித்த நத்தானியேல், தான் செய்ததை தன்னால் சரிசெய்ய முடியாது என்றாலும், தான் அஃப்சால் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், இது காலம் கடந்த செயல் என்று கூறியுள்ள அஃப்சால் குடும்பத்தினர், நத்தானியேல் மன்னிப்புக் கோரியதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
அவர் வன்முறையைப் பிரயோகித்து, ஒரு சிறுபிள்ளை உட்பட மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்களைக் கொன்றுவிட்டார்.
அவர் உண்மையாகவே வருந்துபவர் என்றால், இந்த விசாரணைக்கு அவசியமே இருந்திருக்காது. அவருக்கு மன்னிப்புக் கோர வாய்ப்பிருந்தும் இதற்கு முன் மன்னிப்புக் கோரவில்லை. இரண்டரையாண்டுகளாக அவர் மேற்கொண்டுவரும் யுக்திகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை. அவரது யுக்திகளில் இதுவும் ஒன்று என்று கூறி, அவரை மன்னிக்க மறுத்துவிட்டார்கள் அஃப்சால் குடும்பத்தினர்.