தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் இவ்வாண்டு ஜனவரியில் சுமார் 24,665 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றுள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்றுநோய்க்கு முன்னராக காலப்பகுதியில் கனடா மாதாந்தம் வரவேற்ற புதிய குடியிருப்பாளர்களுக்கு நிகராக இது அமைந்துள்ளது.
தொற்றுநோய்க்கு முன்னர் கனடா மாதத்திற்கு 25,000 முதல் 35,000 புதிய குடியேற்றவாசிகளை வரவேற்றது.
கனடா கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி முதல் கொரோனா வைரஸின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்தியதை அடுத்து புதிய குடியேற்றங்கள் சடுதியாகக் குறைந்தன. கடந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டவில்லை.
2020 ஆம் ஆண்டில் 184,370 புதிய குடியேற்றவாசிகள் மட்டுமே கனடாவுக்கு வந்தனர். ஆனால் இந்த 2020-இல் சுமார் 341,000 குடியேற்றவாசிகளை வரவேற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
1998-ஆம் ஆண்டின் பின்னர் மிகக் குறைந்தளவு குடியேற்றவாசிகள் கனடாவுக்கு வந்த ஆண்டாக 2020 பதிவானது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிசினோ இவ்வாண்டு 401,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த இலக்கை கனடா அடையுமானால் 1913-ஆம் ஆண்டில் கனடா வரவேற்றதை ஒத்த அதிக தொகையாக இது அமையும்.
1913 இல் 401,000 புலம்பெயர்ந்தோர் கனடா வந்தனர். இதுவே ஒரு வருடத்தில் அதிக புலம்பெயர்ந்தவர் நாட்டுக்குள் வந்த அதிக தொகையாக இதுவரை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு ஆரம்பத்திலேயே கனடா கிட்டத்தட்ட 25 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்களை வரவேற்றுள்ளமையானது இந்த ஆண்டுக்கான வலுவான தொடக்கமாக அமைந்துள்ளது. கனடாவுக்கான பயணங்கள் இலகுவாக்கப்பட்டால் மாதாந்தம் சுமார் 35 ஆயிரம் புதிய குடியுற்றவாசிகள் நாட்டுக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.