கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேற்று சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் இதன்போது பேசினர்.
அத்துடன், பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் கனடா-அமெரிக்க கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினார்.
உக்ரைனுக்கு எதிரான புடினின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்பு, இதனால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்தும் இரு நாடுகளின் தலைவர்களும் கவனம் செலுத்தினர். மேலும் உக்ரைன் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.
பொருளாதார, மனிதாபிமான மற்றும் இராணுவ ரீதியாக உக்ரைனுக்கு தொடர்ந்து உதவ அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் உறுதியளித்தனர்.
உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பேணும் வகையில் பங்காளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றவும் ஜோ பைடன் மற்றும் ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோர் உறுதியளித்தனர்.
வட அமெரிக்க கண்டத்தின் பாதுகாப்புக்கான கனடாவின் உறுதிப்பாட்டை பிரதமர் ட்ரூடோ இச்சந்திப்பின்போது வலியுறுத்தினார். கனடாவின் 2022 நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு செலவினக் கடமைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். மேலும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) நவீனமயமாக்கலுக்கான ஆதரவைப் பற்றியும் அவர் பைடனுடன் விவாதித்தார்.
அத்துடன், கனடா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமரும் ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டனர்.
கனடா-அமெரிக்க கூட்டாண்மையின் தனித்துவம் மற்றும் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரந்த மற்றும் ஆழமான மக்களுக்கிடையிலான உறவுகளை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டியதுடன், அனைவரின் நலனுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான பரஸ்பர அர்ப்பணிப்பை வலியுறுத்தினர்.
இதேவேளை, ஜோ பைடனை கனடாவுக்கு வருமாறு பிரதமர் ட்ரூடோ அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி பைடன் கனடாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாதகவும் கனேடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.