கனடாவில் ஒருமுறை காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரின் வாளிலிருந்து இரண்டு இஞ்ச் இடைவெளியில் உயிர் தப்பியது குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகரான சஞ்சய் வர்மா, தானும் தன் மனைவியும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து உயிர் தப்பிய ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஒருமுறை, தானும் தனது மனைவியும் இந்தியர்கள் நடத்திய கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதாக தெரிவிக்கிறார் சஞ்சய் வர்மா.
பார்ட்டி முடிந்து இருவரும் வெளியேறும் நேரத்தில், சுமார் 150 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வாசலை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பொலிசாரும் அங்கிருந்திருக்கிறார்கள்.
ஆனால், யாரும் அப்படி சம்பவம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறும் சஞ்சய் வர்மா, திடீரென தன்னை நோக்கி ஒரு வாள் பாய்ந்ததாகத் தெரிவிக்கிறார்.
அது சீக்கியர்கள் பாரம்பரியப்படி வைத்துக்கொள்ளும் சிறு கத்தி அல்ல, அது ஒரு பெரிய வாள் என்று கூறும் சஞ்சய் வர்மா, அந்த வாள் தன்னைத் தாக்க வர, இரண்டு இஞ்ச் இடைவெளியில் தான் தப்பியதாகத் தெரிவிக்கிறார்.
பின்னர் உள்ளூர் பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும், தனக்கு அது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சில சம்பவங்கள் கனடாவில் நிகழ்ந்திருந்தாலும், தன்னைப் பொருத்தவரை, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் சீர்பொருந்தவேண்டும் என்பதே தனது நோக்கம் என்கிறார் சஞ்சய் வர்மா.