Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ 24 மணிநேரத்தினுள் இரு மடங்காக பரவி, சுமார் 2.5 சதுரக்கிலோமீட்டர் பரப்பளவு வரையில் கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக அந்த மாநில காட்டுத்தீ முகாமைத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒலிவர் பிராந்தியத்தின் வடபகுதியில் கடந்த நான்காம் திகதி ஆரம்பித்த இந்த காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானங்கள், பாரிய உபகரணங்கள் சகிதம் நூற்றுக்கும் அதிகமானோர் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெப்பத்துடன் கூடிய வானிலையுடன், சரிவான மலைப்பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையால், தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும், அங்குள்ள சுமார் 206 கட்டுமானங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், கட்டுமான பாதுகாப்பு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு படை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதியிலிருந்து பலத்த புகை வெளியாகி காற்றில் மாசினை அதிகரித்துள்ளதனால், அந்தப் பிராந்தியத்தில் காற்று தூய்மைக்கேட்டு எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.