உலக தமிழ்பேரவையும் (GTF) கனேடிய தமிழ் காங்கிரசும் (CTC) தமிழ் மக்களின் அபிலாசைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இலங்கையின் யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளதாக கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையிலிருந்து தமிழர்கள் தப்பியோடிவந்துள்ளனர். 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்த காலம் முதல் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடுரமான குற்றங்களிற்காக நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
இலங்கையில் நீதி பொறுப்புக்கூறல் இன்றி அமைதி சமாதானம் சாத்தியமில்லை. ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை ஆதாரங்களை சேகரித்துவருவதுடன் இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிரான விசாரணைகள் உட்பட சாத்தியமான மூலோபாயங்களை முன்வைக்கவுள்ளது.
கனடாவின் பிரம்டன் நகரமும் கனடாவின் அனைத்து நிர்வாகங்களும் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளானார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. எனினும் உலகதமிழர் பேரவை (GTF) கனேடிய தமிழ் காங்கிரசின் (CTC) ஆலோசனை குழுவின் உறுப்பினர் ஒருவருடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இலங்கையின் யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இது நீதி பொறுப்புக்கூறல் என்ற இலக்கில் ஒரு அடி பின்னோக்கிய நடவடிக்கையாகும். தமிழ் மக்களிற்கு எதிரான மிகமோசமான குற்றங்களிற்காக கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள யுத்த குற்றவாளியும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவுடன் கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் படமெடுத்துக்கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
உலகதமிழர் பேரவை கனேடிய தமிழ் காங்கிரசின் இந்த நடவடிக்கைகளை நான் கடுமையான கண்டிக்கின்றேன், கனேடிய தமிழ் அமைப்புகளும் கனடா அரசாங்கமும் தமிழ் மக்களின் நீதி பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதில் உரிய தார்மீகநிலைப்பாட்டை தெரிவு செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.