தமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகன பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துவரும் நவம்பர் மாதம் -07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொரன்டோவில் இந்தப் பேரணி இடம்பெறும்.
கனடிய தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகமும் இணைந்து பேரணி ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
மார்க்கம் ஸ்டில்ஸ் சந்திப்பில் வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்
சம நேரத்தில் பிராம்டனில் குயின் மற்றும் மெயின் வீதி சந்திப்பிலிருந்தும் வாகனப் பேரணி தொடங்கும்.
தொடர்ந்து 360 யுனிவர்சிட்டி அவெனியுவில் பிற்பகல் 3:30 தொடக்கம் 5:30 வரை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கனடிய தமிழர் தேசிய அவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1948 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் உள்ளடக்கி இலங்கை அரசாங்கத்திற்கெதிரான விசாரணை செய்ய கனடிய அரசு வலியுறுத்த வேண்டும் என கனடியத் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மார்ச் 2021 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானம் 46/1, உள்நாட்டில் விசாரணையை முன்னெடுப்பதில் உள்ள தோல்விகளையும் தொடர்ச்சியாக இலங்கையில் நடாத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களையும் வெளிச்சமிட்டுக் காட்டின. அதே தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் தொடர்ச்சியாக தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து ஒருங்கிணைத்து பாதுகாத்து வைக்க வேண்டியும் வலியுறுத்தியது. அத்தோடு மனித உரிமை ஆணையாளர் சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
வரலாற்று ரீதியாக, கடந்த ஏழு சகாப்தங்களாக தமிழ் தலைவர்களுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும் இலங்கை அரசினால் இறுதியில் தவிடுபொடியாக ஆக்கப்பட்டே வந்துள்ளன. இலங்கை அரசாங்கம் தமிழர் தேசத்துக்கு எந்த விதமான ஒரு நிரந்தரத் தீர்வையும் பெற்றுத் தருவார்கள் என்றோ அல்லது உண்மையான நீதியை முன்னெடுப்பார்கள் என்றோ நாங்கள் நம்பவில்லை. எனவே உலகமெங்கும் உள்ள மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் முழுமையான விசாரணையை முன்னெடுத்து உண்மையான நீதியை வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்.
இலங்கைத் தீவில் பல சகாப்தங்களாக தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வந்துள்ளனர். கனடாவில் வெவ்வேறு மட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும் பிரதிநிதிகளும் தமிழ் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வந்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு பாரிய அளவிலான மனிதப் படுகொலை நடாத்தப்பட்டபோது 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை சான்று பகிர்கிறது. இதன் அடிப்படையில் தன்னிச்சையான சர்வதேச விசாரணை இலங்கையில் நடாத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் இந்தத் தீர்மானத்தின் அடங்கி இருக்கும் எந்த சரத்தில் உள்ள விடயங்களிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. ஈழத்தமிழர்கள் வெகு நீண்ட காலமாக நீதிக்கான காத்திருப்பை மேற்கொண்டுள்ளார்கள்.
தங்கள் அடிப்படை உரிமையான சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவும், தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு நீதியை எதிர்பார்த்தும் வெவ்வேறு வகையிலான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். சர்வதேச அழுத்தம் இலங்கை அரசுக்கு எதிராக சரியான முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தியம் ஒரு நீதி மறுக்கப்பட்ட மோதல்கள் நிறைந்த பகுதியாக மாறும் என்பதில் ஐயமில்லை என்றுள்ளது.