Reading Time: < 1 minute

கனடா, இந்தியா தூதரக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், சர்வதேச மாணவர்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.

இந்நிலையில், கனடா பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தர் ஒருவர், இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

Dr. Rhonda L. Lenton
Dr. Rhonda L. Lenton, York University’s 8th President and Vice-Chancellor

சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என கனடா பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

இது, கனடாவில் கல்வி கற்கும் மற்றும், கல்வி கற்க ஆயத்தமாகிவரும் இந்திய மாணவர்களுக்கு பெரும் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கனடாவிலுள்ள பெரிய பல்கலைகளில் ஒன்றான யார்க் பல்கலையின் தலைவரும், துணைவேந்தருமான Dr Rhonda L Lenton, இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தொடர்ந்து நடந்துவரும் விடயங்களை யார்க் பல்கலைக்கழகம் உற்று கவனித்துவருவதாகவும், இரு நாட்டு அரசுகளும் இந்த தூதரக பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் கண்டுபிடிக்கும் என தாங்கள் நம்புவதாகவும் Dr Rhonda L Lenton தெரிவித்துள்ளார்.

அதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், கனடாவும் யார்க் பல்கலைக்கழகமும் இந்திய வம்சாவளி சர்வதேச மாணவர்களுக்கு பாதுகாப்பானது மற்றும் அவர்கள் வரவை அவை விரும்புகின்றன என மீண்டும் உறுதியளிப்பதற்காக அவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாணவ மாணவியருடைய உடல் மற்றும் மன நலனுக்கான உதவிகள், கல்வி தொடர்பான ஆலோசனைகள், விசா மற்றும் புலம்பெயர்தல் தொடர்பில் பல்கலை வழங்கும் உதவிகளை பெற ஆவன செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் Dr Rhonda L Lenton.