Reading Time: < 1 minute

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருபவர்களுக்கு 30 நாட்கள் பயணத் தடை விதித்து கனடா மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இரு நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு 30 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு 11.30 மணி முதல் இந்தத் தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.

அதிகரித்து வரும் கொவிட்-19 புதிய பிறழ்வு வைரஸ்களை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்குமாறு ஒன்ராறியோ முதல்வர் உள்ளிட்ட மாகாண அரச தலைவர்கள் கொடுத்துவந்த கடும் அழுத்தங்களின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணங்கள் மூலம் அண்மைய சில நாட்களாக கனடா வந்தவர்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் அரைவாசிப் பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என கனேடிய மத்திய சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து தெரிவித்தார்.

அத்துடன், பாகிஸ்தானில் இருந்து வருபவர்களிடையேயும் கணிசமான அளவு தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்களுக்கான பயணத் தடையை விதிப்பதன் மூலம் தொற்று நோயை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனக் கருதுவதாகவும் கனேடிய சுகாதார அமைச்சர் ஹஜ்து வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாடுகளுக்குச் செல்லவும், வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு வரவும் இது உகந்த நேரம் இல்லை என கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ குறிப்பிட்டார்.

இந்தியாவில் தற்போது தினசரி 3 இலட்சத்துக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திவரும் B.1.617 புதிய கொரோனா வைரஸ் பிறழ்வு தொற்று நோயாளர்கள் இந்த வார தொடக்கத்தில் கியூபெக்கில் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்தே தொற்று நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருவோருக்கு 30 நாட்களுக்குப் பயணத் தடை விதித்து கனேடிய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.