Reading Time: < 1 minute

இராஜதந்திர முறுகலின் மற்றுமொரு நகர்வாக, இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ஆறு இராஜதந்திரிகளை கனடா (Canada), இன்று(14) தமது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது.

இந்தியா, கனடாவுக்கான தமது உயர்ஸ்தானிகரை கனடாவில் இருந்து திருப்பியழைப்பதாக அறிவித்த நிலையிலேயே கனடாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் செயற்பட்டமைக்கான ஆதாரங்களை பொலிஸார் சேகரித்த பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் கனடாவில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் குறித்த கணிசமான அளவு தகவல்கள் தங்களிடம் இருப்பதாக கனேடிய பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தநிலையில், கனடாவை தளமாகக் கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ பதவியை பயன்படுத்தி இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது என்றும் ரோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம், தமது நாட்டிலுள்ள அதிகாரிகள் மூலம் தகவல்களைச் சேகரித்து வருகிறது. அத்துடன் இந்தத் தகவல்கள் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைக்க இந்திய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது என்றும் கனேடிய பொலிஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னதாக, 2023இல் சீக்கிய தீவிரவாதி நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவை கனடா குற்றம் சுமத்தியிருந்தது.எனினும், இந்தியா அதனை மறுத்து வந்தது.

இந்தநிலையில், இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்டவர்களை, விசாரணையின் பகுதியாக கனடா பார்ப்பதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியா தமது உயர்ஸ்தானிகரை இன்று கனடாவில் இருந்து திருப்பியழைப்பதாக அறிவித்திருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.