Reading Time: < 1 minute

இந்தியாவுடனான பயணிகள் மற்றும் வணிக விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்துக்கு கனடா நீடித்துள்ளது.

இந்தியா – கனடா இடையிலான அனைத்து விமானங்களுக்குமான தடை ஜூலை 21 வரை அமுலில் இருக்கும் என கனடா போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல் காப்ரா தெரிவித்தார்.

எனினும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை நீடிக்கப்படவில்லை.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான போக்குவரத்து மற்றும் வணிக விமானங்களுக்கு தடை விதித்து ஏப்ரல் 22 ஆம் திகதி கனடா உத்தரவிட்டது. பின்னர் மே -22 வரையும் அதன் பின்னர் ஜூன் -30 வரையும் தடை நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை மேலும் ஒருமாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் தடுப்பூசிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேவேளை, பாகிஸ்தானுடனான விமான பயணங்களுக்கான தடை புதிய உத்தரவில் நீடிக்கப்படவில்லை.

“இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயாளர் எண்ணிக்கை தொடர்ந்து மிக அதிகமாக இருப்பதால் அந்த நாட்டுடனான விமான பயணக் கட்டுப்பாடுகளை நீடித்துள்ளோம்” என கனடாவின் போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா கூறினார்.

“நாங்கள் தொடர்ந்து இந்தியாவின் தொற்று நோய் நிலைமையை மதிப்பிடுவோம். நிலைமை சீரானால் தடையை தளர்த்துவது குறித்து தீா்மானிக்கப்படும்” எனவும் அவா் குறிப்பிட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதம் நீடித்து கனடா கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.