Reading Time: < 1 minute

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில் அவசர மருத்துவ உதவிப் பொருட்களை இந்தியாவுக்கு கனடா அனுப்பியுள்ளது.

25,000 ரெம்டிசிவிர் (remdesivir) அன்டிவைரல் மருந்து, 350 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களுடன் ஒன்ராறியோ- ட்ரெண்டனில் உள்ள கனேடிய விமான படைகளின் தளத்தில் இருந்து விமானம் ஒன்று நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டது.

இந்தியாவுக்கு ஏற்கனவே 10 மில்லியன் டொலர் பெறுமதியான உதவியை கனடா வழங்கியுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக இந்தப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தொற்று நோயுடன் போராடிவரும் இந்திய மக்களுக்கு உதவுவதில் கனடா தொடர்ந்து உறுதியுடன் உள்ளது. உலகெங்கிலும் பேரழிவு தரும் இந்த வைரஸுக்கு எதிரான சா்வதேச அளவிலான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னியோ நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி 4 இலட்சத்துக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் தினசரி கொரோனா மரணங்களும் 4 ஆயிரம் வரை பதிவாகி வருகின்றன.

கடந்த வாரத்தில் உலகெங்கும் பதிவான ஒட்டுமொத்த தொற்று நோயாளர்களில் 50 வீதமானோர் இந்தியாவில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உலகில் கடந்த வாரம் பதிவான ஒட்டுமொத்த கொரோனா மரணங்களில் 25 வீதம் இந்தியாவில் பதிவானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் மருத்துவமனைகள் முற்றாக நிரம்பியுள்ளன. நோயாளர்கள் மருத்துவமனைகள் முன்பாகவும் வாகனங்களிலும் நீண்ட வரிசையில் ஒக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகளுக்காக காத்துக்கிடக்கின்றனர். எனினும் அவை கிடைக்காமல் வீதிகளிலும் வாகனங்களிலும் பரிதாபமாகப் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் இறுதிச் சடங்குகளை செய்வதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. உடல்களைத் தகனம் செய்ய சடலங்களுடன் உறவுகள் நாள் முழுவதும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் அவலங்களும் இந்தியாவில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கு உதவும் வகையில் கனேடியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் கடந்த வாரம் 10 மில்லியன் டொலர் உதவியை கனடா அனுப்பிவைத்தது.

இதேவேளை, ஒன்ராறியோ மற்றும் சஸ்காட்செவன் மாகாணங்களும் வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளன. தொற்று நோயுடன் இந்த மாகாணங்கள் போராடிவருகின்றபோதும் இந்த உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து கனடா 27,000 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.