Reading Time: < 1 minute

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளதால், இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என கனடா புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியது. அதன்படி, அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டதாக கனடா வெளி விவகாரங்கள் துறை அமைச்சரான Mélanie Joly தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller, கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, கனடா வர விரும்பும் இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என்று கூறியுள்ளார்.

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பும், இந்தியாவில் அதன் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இருப்பதாக புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அதிகாரிகள் 27 பேர் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை வெறும் 5ஆக குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் கனடா விசா பெறுவதற்கான நடவடிக்கைகளை, இந்தியாவிலிருக்கும் கனேடிய அதிகாரிகளும் செய்யவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், இனி இந்தியர்களின் விசா பரிசீலனை தாமதமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.