Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர் பலரை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய இருவர் வழக்கில் விசாரணை இன்று துவங்க உள்ளது.

2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றது.

ஆனால், கனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து, அந்தக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் பரிதாபமாக பலியாகிக் கிடந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கின.

பட்டேல் குடும்பத்தினர் உட்பட பலரை கனடா அமெரிக்க எல்லை வழியாக கடத்திய விவகாரம் தொடர்பாக, ஹர்ஷ்குமார் பட்டேல் மற்றும் ஸ்டீவ் ஷாண்ட் (Steve Shand) என்னும் இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்டீவ் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கனேடிய எல்லைக்கருகே அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கைது செய்யப்பட்டார்.

ஹர்ஷ்குமார், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிகாகோவில் கைது செய்யப்பட்டார்.

நீண்ட தாமதத்துக்குப் பின், ஹர்ஷ்குமார் பட்டேல் மற்றும் ஸ்டீவ் ஷாண்ட் மீதான வழக்கு விசாரணை இன்று மின்னசோட்டாவில் துவங்க உள்ளது.