இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இவரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் பெண் ஒருவர் வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயாரிக்கிறார். அதனை பாத்திரத்தில் ஊற்றும் அவர், பின்னர் அதனை பெரிய பாத்திரத்திற்குள் வைத்து இடையே ஐஸ் கட்டிகளை நிரப்புகிறார். தொடர்ந்து மின் விசிறியில் இணைக்கப்பட்ட கயிறை கொண்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை சுழல செய்கிறார்.
சிறிது நேரத்தில் அந்த பாத்திரத்தை வெளியே எடுக்கும் அவர் தயாராகி இருக்கும் ஐஸ்கிரீமை சிறிய கிளாசில் நிரப்பி அருகில் இருப்பவர்களுக்கு அளிக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மஹிந்திரா அதில்,”மனம் இருந்தால் ஒரு காரியத்தை செய்துமுடிக்க வழியும் கிடைக்கும். Hand-made & Fan-made ice ஐஸ்கிரீம். ஒன்லி இன் இந்தியா” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன் பலரும் இந்த பெண்மணியின் வித்தியாசமான முயற்சியை பாராட்டி வருகின்றனர். இதுவரையில் இந்த வீடியோ 3.2 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.