ஒன்ராறியோவின் லண்டனில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றி விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்திய சம்பவத்தில் பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஹாமில்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் மீது நான்கு பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 தொடக்கத்தில் இணையத்தில் வேலை வாய்ப்பு தொடர்பில் விளம்பரம் செய்துள்ளார் 26 வயது இளைஞர் ஒருவர்.
இதில் நம்பிச் சென்ற பெண் ஒருவரை பணத்திற்காக பலருடன் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். தொடர்புடைய சம்பவம் 2019 மார்ச் மற்றும் ஜூலை மாதங்களிலும் 2020 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையிலும் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த வார இறுதியிலேயே பொலிசாரை அணுகி நடந்தவற்றை புகாராக அளித்துள்ளார். இதனையடுத்து, விசாரணை முன்னெடுத்த பொலிசார், தற்போது அந்த நபர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
தொடர்புடைய இளைஞர் ஏற்கனவே சில வழக்குகளில் சிக்கி, பொலிஸ் காவலில் உள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குறித்த வேலை வாய்ப்பு விளம்பரத்தால் ஏமாற்றப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்தால் விசாரணை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்க பொலிசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.