வியாழக்கிழமை பதவி விலகிய முன்னாள் ஆளுநர் நாயகத்தின் மாற்றீடு குறித்து கனடிய பிரதமர் இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் உரையாடியுள்ளார்.
தனக்கு எதிரான பணியிடத் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு சுயாதீன ஆய்வு முடிந்துள்ள நிலையில் கனடாவின் ஆளுநர் நாயகம் Julie Payette தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் Justin Trudeau இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் ஆளுநர் நாயகத்திற்கான தனது இடைக்காலத் தேர்வு குறித்து இரண்டாம் எலிசபெத் மகாராணியிடம் பிரதமர் Trudeau விளக்கியுள்ளார் .
இடைக்கால அடிப்படையில், கனடாவின் தலைமை நீதிபதி Richard Wagner ஆளுநர் நாயகத்தின் கடமைகளை நிறைவேற்றுவார் என பிரதமர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னாள் ஆளுநர் நாயகத்தின் நியமனத்திற்காக பிரதமர் Trudeau வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மன்னிப்பு கோர மறுத்துள்ளார். மாறாக அடுத்த ஆளுநர் நாயகத்திற்கான தெரிவு முறையை வலுப்படுத்துவதற்கான வழிகளை தனது அரசாங்கம் ஆராந்து வருவதாக பிரதமர் கூறுனார்.
சிறுபான்மை நாடாளுமன்றங்களின் போது ஒரு ஆளுநர் நாயகத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து புதிய ஆளுநர் நாயகத்தை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன