ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றயதுடன், கனடா, அமெரிக்க உள்ளிட்டவெளிநாட்டுப் படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் தற்போது அங்கு சுமார் 1,250 கனேடியர்கள் மற்றும் கனட வதிவிட உரிமம் பெற்றவர்கள் சிக்கியுள்ளனர்.
தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து 3,700 பேரை மீட்டு நாட்டுக்கு அழைத்து வந்ததாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் 1,250 கனேடியர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமமம் பெற்றவர்கள் இன்னமும் உள்ளதாக அரசாங்கம் அறிந்துள்ளது என வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட 5,000 அகதிகளை ஏற்க கனேடிய அரசாங்கம் தீா்மானித்துள்ளதாக குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ கூறினார்.
20,000 ஆப்கான் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் கனேடிய அரசின் முன்னைய அறிவிப்புக்கு மேலதிகமாக இவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
சமூகத்தின் உரிமைகளுக்காக, நீதிக்காக போராடிய மற்றும் கனடியர்களுக்கு உதவிய, ஆப்கானிஸ்தான் குடும்பங்களை நாங்கள் வரவேற்க விரும்புகிறோம் என நேற்று தோ்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய லிபரல் தலைவது ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
சரியான ஆவணங்கள் உள்ளவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற தலிபான்களால் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவலை கூட்டணி நாடுளுடன் இணைந்து கனடா உறுதி செய்துள்ளதாக குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்புப் பணிகளை கனடா கடந்த வாரம் முதல் நிறுத்தியபோதும், கனடாவுக்கு வர தகுதியான ஆப்கானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று அரசாங்கம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.