ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பழிவாங்கப்படலாம் என அஞ்சப்படும் பெண்ணுரிமைவாதிகள், மனித உரிமைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 20,000-க்கு மேற்பட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கி கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கனடிய இராணுவத்துடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானிஸ்தானியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தூதரக பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாப்பாக கனடாவில் குடியேற்றும் கனடாவின் முயற்சிக்கு மேலதிகமாக இவா்களுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ மெண்டிசினோ கூறினார்.
“ஆப்கானிஸ்தானில் பல இடங்களை தலிபான்கள் தொடர்ந்து கைப்பற்றி வருவதால் அங்கு இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது” எனவும் அவர் அவர் குறிப்பிட்டார்.
எனினும் பெண்ணுரிமைவாதிகள், மனித உரிமைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் வழங்குவதற்கான கால எல்லையை அவர் குறிப்பிடவில்லை.
இதேவேளை, கனேடிய படையினருக்கு உதவிய ஆப்கானியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் முயற்சியில் கனேடிய படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் குறிப்பிட்டார். எனினும் இது குறித்த மேலதிக விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
கனடாவின் புதிய திட்டம் பாதிக்கப்படக்கூடியவர்கள், பெண் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், துன்புறுத்தலை எதிர்கொண்டுவரும் மத சிறுபான்மையினர் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக மெண்டிசினோ கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து முன்னேறிவரும் தலிபான்கள் அங்கு முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.