ஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து கனேடிய ராஜதந்திரிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ – மார்க்கம் நகரில் நேற்று இடம்பெற்ற தோ்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த சில நாட்களில் ராஜதந்திரிகள் உள்ளிட்டவர்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒன்பது விமானங்கள் கனடாவுக்கு வந்துள்ளதாக கூறினார்.
இறுதியாக திங்கட்கிழமை இரவு ஆப்கானிஸ்தானில் கனேடிய படையினருக்கு மொழிபெயர்ப்பாளர்களாகக் கடமையாற்றிவர்கள் உட்பட பலரை ஏற்றிக்கொண்டு இரண்டு விசேட விமானங்கள் ரொராண்டோ மற்றும் ஒட்டாவாவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் அமெரிக்காவுடன் நெருக்கமாக இணைந்து ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பற்ற சூழலை உணரும் தரப்பினரை வெளியேற்றி வருகிறோம். அடுத்துவரும் நாட்களில் இவ்வாறு தொடர்ந்து மேலும் பலரை அழைத்து வருவோம் எனவும் பிரதமர் ட்ரூடோ கூறினார்.
அத்துடன், ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் சா்வதேச சமூகத்துடன் இணைந்து கனடா தொடர்ந்து செயற்படும் எனவும் ட்ரூடோ குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் அகதிகள் சுமார் 20,000 பேருக்கு அடைக்கலம் அளிக்க கனடா முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.