கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று வெள்ளிக்கிழமை தனது இரண்டாவது கோவிட் 19 தடுப்பூசியைப் பெறுவார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 23 அன்று ஒட்டாவாவில் உள்ள தடுப்பூசி மையத்தில் முதலில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பிரதமரும் அவரது மனைவி சோஃபி கிரேகோயரும் பெற்றுக்கொண்டனர். இன்று மொடர்னா தடுப்பூசியை பிரதமர் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தத் தடுப்பூசி மையத்தில் பிரதமர் இன்று தடுப்பூசி பெறுவார் என்பதை அவரது அலுவலகம் அறிவிக்கவில்லை.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை முதலில் பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னா அல்லது பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என கடந்த மாதம் கனடா நோய்த்தடுப்பு தேசிய ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.
இந்நிலையிலேயே இந்தப் பரிந்துரையைப் பின்பற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் முதல் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாவதாக மொடர்னா தடுப்பூசியை பெற பிரதமர் தீா்மானித்துள்ளார்.
இதேவேளை, கனடாவில் தடுப்பூசி பெறத் தகுதியான மக்களில் கிட்டத்தட்ட 35 வீதம் பேர் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
முதல் தடுப்பூசியைப் பெற்ற அனைவரும் உரிய காலப்பகுதியில் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த மாத இறுதிக்குள் கனடாவுக்கு மேலும் 68 மில்லியன் தடுப்பூசிகள் வந்து சேரும் என கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
செப்டம்பர் இறுதிக்குள் தகுதிவாய்ந்த அனைத்து கனேடியர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடும் இலக்கை அடைவதற்கு போதுமான அளவுக்கும் அதிகமான தடுப்பூசிகள் இதன்மூலம் கனடாவுக்குக் கிடைக்கும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.