அவுஸ்ரேலியாவில் தீவிரமடைந்து வரும் ஆபத்தான காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, கனடாவின் தீயணைப்பு குழுவொன்று அங்கு விரைந்துள்ளது.
பேரழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு 3,000 படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இதில் கனடாவை சேர்ந்த 21 கனேடியர்கள் கொண்ட குழுவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவுஸ்ரேலியாவிற்கு மூன்று தீயணைப்பு படை குழுக்கள் அனுப்பபட்டுள்ள நிலையில், நான்காவது குழு இன்று (சனிக்கிழமை) நியூ சவுத் வேல்ஸிற்கு சென்றுள்ளது.
முதலாவது குழு டிசம்பர் தொடக்கத்திலும், இரண்டாவது குழு டிசம்பர் 19ஆம் திகதியும், மூன்றாவது குழு டிசம்பர் 30ஆம் திகதியும் அனுப்பட்டது.
கடந்த 5 மாதங்களாக கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் காட்டுத்தீயினால் 14.5 மில்லியன் ஏக்கர் நிலம் தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ஆபத்தான காட்டுத்தீ தீவிரமடைந்து வருவதால், அவுஸ்ரேலியா பாதுகாப்புப் படை அதிகாரிகள் நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் கடற்படை மற்றும் விமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அழிக்கப்படக்கூடிய நகரங்களில் வசிப்பவர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அங்கிருந்து வெளியேற்றிவருகின்றனர்.