கடந்த ஆண்டில் ஒன்ராறியோவில் மட்டும் அளவுக்கு அதிகமான போதை மருந்துகளைப் பயன்படுத்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 1,500ஆக பதிவாகியுள்ளது.
ஒன்ராறியோ பொதுச் சுகாதாரப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த 2018ஆம் ஆண்டில் இவ்வாறு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,473 எனவும், இது கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை 2016ஆம் ஆண்டில் 867ஆக இருந்த இவ்வாறான மரணங்கள், 2017ஆம் ஆண்டில் 45 சதவீதம் அதிகரித்து 1,261ஐ எட்டியதையும் அந்தப் புள்ளிவிபரம் சுட்டிக்காட்டியுள்ளது
இந்த அதிகரிப்புக்கான காரணங்கள் சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், வீதியோர போதை மாத்திரை விற்பனை அதிகரிப்பு இவ்வாறான உயிரிழப்பு அதிகரிப்புகளில் முக்கிய பங்கினை வகித்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.