கனடா – அல்பர்ட்டா மாகாணத்தில் கோவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாக மாகாண முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளும் நேரடி கற்றல் செயற்பாடுகளுக்காக மூடப்பட்டு இணைய வழி கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பணியிடங்கள் 10 நாட்கள் மூடப்படும். உணவகங்களில் அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்படும். இறுதிச் சடங்கு மற்றும் சமய நிகழ்வுகளில் பங்கேற்பாளர் தொகை மட்டுப்படுத்தப்படும் எனவும் அல்பர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கனடாவின் எரிசக்தி தொழிற்துறை மையமான அல்பர்ட்டாவில் மக்கள் தொகை அடிப்படையில் கனடாவில் மிக உயர்ந்த வீதத்தில் தொற்று நோய் பரவி வருகிறது.
இந்நிலையில் அவசிய தேவைகள் தவிர மக்களை வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்குமாறு ஜேசன் கென்னி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அல்பர்ட்டா மாகாணத்தில் மக்களை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.