Reading Time: < 1 minute

கனடா அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை உளவுத்துறை அதிகாரிகள் அவரை கைதுசெய்து, கனடாவின் குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

கனடாவின் றோயல் மவுன்டட் பொலிஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் ஆணையாளர் பொப் பால்சன் என்பவரின் ஆலோசகராக இருந்த மூத்த உயர் அதிகாரியான கமரூன் ஆர்டிஸ் புலனாய்வுத் துறை விடயங்களை பொறுப்பெடுத்தார்.

இந்நிலையில் அண்மையில், இவர் நாட்டின் பல உளவு இரகசியங்களைத் திருடி இரகசியமாக பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ‘லிங்குடு இன்’ என்ற சுய விவர பட்டியல் உள்ள சமூக வலைதளத்தில், சீனாவில் அதிகம் பேசப்படும் மன்டரின் என்ற மொழி தனக்கு தெரியும் என அவர் பதிவிட்டிருந்தார்.

சீனாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொழில் ரீதியாக பல கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில் ஆர்டிஸ், அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை திருடியிருக்கக் கூடும் என அஞ்சப்பட்டது. இதனடிப்படையில், விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள், கடந்த வியாழக்கிழமை அவரை கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, நாட்டின் இரகசிய தகவல்களை திருடியும், முக்கிய ஆவணங்களை பதுக்கி வைத்தும், கூடுதல் விவரங்களை சேகரித்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ‘ஐந்து கண்கள்’ என்ற உளவுத்துறை அமைப்பில் கனடாவும் ஒரு உறுப்பு நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares