Reading Time: < 1 minute

அமெரிக்க வான்பரப்பில் வைத்து கனேடிய விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்று எரிந்து வீழந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கனேடிய அரச விமானப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஜோர்ஜியாவின் ஹம்ப்டன் பகுதியில் நடைபெற்ற வான் சாகச நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த தமது விமானம் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வீழந்து நொருங்கியதாகவும், எனினும் அதன் விமானி விமானம் வீழ்வதற்கு முன்னரே பாதுகாப்பாக குதித்து வான்குடை மூலம் தப்பியதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் விழ்ந்து நொருங்கிய இடத்திலும் எவரும் இல்லை என்பதனால், இந்தச் சம்பவத்தினால் எவரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது.

குறித்த அந்த சாகச நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த அந்த விமானம் வீழ்ந்து நொருங்கியதை அடுத்து, அதன் பின்னர் அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த மிகுதி சாகச நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால், எதனால் இந்த விபத்து சம்பவித்தது என்பதனை ஊகிப்பது கடினம் என்று விமானப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.